தமிழகத்தின் பெரும்பகுதியையும் இராமேஸ்வரத்தையும் இணைப்பதுதான் பாம்பன் பாலம். இந்த இடத்தில் தரைவழி மற்றும் ரயில் பாதை இருந்தாலும், ரயில் பாதையே பாம்பன் பாலம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய கடல் பாலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது இந்தப் பாலம். 1914 ஆம் ஆண்டிலேயே கட்டி முடிக்கப்பட்ட இந்த பாலத்தில் மொத்த நீளம் 2.3 கி.மீ.
பழைய புத்தகங்களின் படி, இந்தியாவின் குஜராத்
மாநிலத்தில் உள்ள ஷத்திரிய வம்சத்தை சேர்ந்த மக்களால் இந்த பாலம்
கட்டப்பட்டதாகவும், 1912ல் கட்டிமுடிக்கப்பட்டு, தென்னக இரயில்வே துறையிடம்
ஒப்படைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. பின்னர் தென்னக இரயில்வே இந்தப்
பாலத்தில் சிறிய ரக ரயில்கள் செல்வதிற்கு ஏதுவாக குறுகிய தண்டவாளங்கள் அமைத்தது.
முதன் முதலில் 1914 ஆம் ஆண்டு சென்னையில்
இருந்து கொலம்போ செல்வதற்கான ரயில்-கப்பல் (சென்னையில் இருந்து
ரயில் மூலம் தனுஷ்கோடி வந்தடைந்து பின்னர் கப்பல் மூலம் கொலம்போ செல்லும் boat
mail சேவை) பயணத்திற்காக இந்த பாலம் பயன்படுத்தப்பட்டது.
இந்தப் பாலத்தை இருவழிப் பாலம் என்று கூட
அழைக்கலாம். ரயில்கள் செல்வதற்காக பாலம் கட்டப்பட்டால் கப்பல் போக்குவரத்து
தடைபடும், இதனை கருத்தில் கொண்டு ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து இரண்டும்
தடைபடாதவாறு கட்டப்பட்ட பாலம் இது. இந்த பாலமானது பெரிய கப்பல்கள் வரும்போது
தூக்கப்பட்டு வழிவிடும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
18000 டன் ஜல்லி, 5000 டன் சிமெண்ட், 18000
டன் இரும்பு ஆகியவை கொண்டு கட்டப்பட்ட இந்தப் பாலத்தை கடலில் எழுப்பப்பட்டுள்ள 145 தூண்கள்
தாங்கிப்பிடிக்கின்றன.பாலம் கட்டப்பட்டுள்ள இடம், உலகிலேயே இரண்டாவது அதிக
துருப்பிடிக்கும் இடமாகும். இருந்தும் இந்தப் பாலம் இன்று வரை கம்பீரமாய் வலிமையுடன் நிமிர்ந்து நிற்கிறது.

சில காலம் முன்பு வரை கப்பல்கள் செல்லும் போது மனிதர்களே இந்த இரும்பு பாலத்தை இயக்கினர்...பின்னர் 2007 ஆம் ஆண்டு தென்னக இரயில்வே குறுகிய தண்டவாளங்களை நீக்கி அகல ரயில் பாதையாக மாற்றியபோது, பாலத்தை இயக்க இயந்திரங்களை உபயோகப்படுத்த முடிவு செய்து, இயந்திரங்கள் மூலம் பாலம் இயக்கப்பட்டது.
1964 ஆம் ஆண்டு தனுஷ்கோடியை புயல் தாக்கியபோது கூட இந்தப் பாலத்தின் இரும்பு பகுதி சேதமடையவில்லை, ஆனால் பாலத்தின் மற்ற பகுதிகள் சேதமடைந்ததால் போக்குவரத்து சில காலம் தடைப்பட்டது. பின்னர் 45 நாட்களில் பாலம் சரிசெய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது.
இந்த ரயில் பாலத்திற்கு அருகிலேயே தரைப் பாலமும் உள்ளது. 1974 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்ட இந்த தரைப் பாலம் 14 ஆண்டுகளுக்கு பிறகு 1988ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. இதை அன்றைய பாரதப் பிரதமர் இராஜீவ் காந்தி திறந்துவைத்தார். இந்த பாலத்தில் இருந்து பார்த்தால் அருகில் உள்ள இரயில் பாலமும், இராமேஸ்வரத்தில் உள்ள சில தீவுகளும் தெரியும்.
No comments:
Post a Comment